Tuesday, October 17, 2017

கண்களில் ஏக்கத்துடன் கறுப்புத் தீபாவளி;சு.நிஷாந்தன்


இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வீதம் கடந்த இரு ஆண்டுகளாக வீழ்ச்சிப்போக்கிலேயே தொடர்வதாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திச்சுட்டி மற்றும் மத்திய வங்கியின் அறிக்கையின் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது. 2012ஆம் ஆண்டு 7.3 வீதமாக இருந்த பொருளாதார அபிவிருத்தி வீதம் 2014ஆம் ஆண்டில் 7.5 வீதமாக மதிப்பிடப்பட்டிருந்தது. நல்லாட்சி அரசு இலங்கையின் நாணயத்தை உலக சந்தையில் மிதக்கவிட்டிருந்ததால் பொருளாதாரம் மெல்ல மெல்ல நலிவடைந்து வீழ்ச்சிப்போக்கில் பயணித்திருந்தது. இன்னமும் அபிவிருத்திப் பாதையை நோக்கி நகரவில்லை.

2015ஆம் ஆண்டு 4.8வீத பொருளாதார அபிவிருத்தியையும், 2016ஆம் ஆண்டு 4.5வீத பொருளாதார அபிவிருத்தியையுமே தேசிய அரசில் எட்ட முடிந்துள்ளது. இதன் தாக்கம் இலங்கையில் மத்தியதர வர்க்கத்திற்கே ஈடுகொடுக்க முடியாதுள்ள நிலையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மலையக சமூகம் எவ்வாறு ஈடுகொடுக்க முடியும்?

ஒருபுறத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் கூட்டு ஒப்பந்த விதிமுறைகளை மீறி சம்பளத்தை வழங்க மறுத்துவரும் சூழலில் அதிகரித்துவரும் பொருளாதார சுமைகளையும் இந்த மக்கள் சுமக்கவேண்டியுள்ளது. அன்றாட உழைப்பிலேயே இவர்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளது. பொருளாதார அபிவிருத்தியோ அல்லது உழைப்பில் போதிய வருவாயோ இல்லாத சூழலில் தற்போதைய நெருக்கடியான பொருளாதார சூழலுக்கும் முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் பெருந்தோட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

நாடுபூராகவும் தமிழ் மக்கள் சொறிந்து வாழும் பிரதேசங்களில் நாளைய தினம் தீபாவளி திருநாளைக் கொண்டாடத் தயாராகிவிட்டனர். ஆனால், மலையகத்தில் இம்முறை கறுப்புத் தீபாவளியை அனுஷ்டிக்கப்போவதாக தோட்டத் தொழிலாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.

தீராத பெருவலியுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவரும் இந்த மக்களுக்கு திருநாட்களைக்கூட கொண்டாட முடியாத அவலநிலையே காலங்காலமாகத் தொடர்கிறது. நல்லாட்சி அரசிலாவது விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பிய இவர்களுக்கு அது ஒரு பகல் கனவாக மாத்திரமே இன்றுவரை தொடர்கிறது.

தீபாவளி முற்பணத்தை நம்பியே பெருந்தோட்ட மக்கள் திருநாள் கொண்டாட்டங்களுக்குத் தயாராகுவர். ஆனால், சில ஆண்டுகளாக இவர்களுக்கு இந்த முற்பணம் முறையாகக் கிடைப்பதில்லை என்பதுடன், பலருக்கு அது அறவே கிடைப்பதில்லை.

2015ஆம் ஆண்டு பெரும் கனவுகளைச் சுமந்துகொண்டு, நாமும் இந்தத் தேசத்தில் ஏனைய சமூகங்களுக்கு நிகராக அரசியலிலும், பொருளாதாரத்திலும் சமவுரிமைபெற்று வாழ முடியும் என்ற ஆணித்தரமான நம்பிக்கையுடன் நல்லாட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதை மைத்திரி ரணில் தலைமையிலான அரசு இதய சுத்தியுடன் இன்றுவரை பார்க்கவில்லை என்பதே நிதர்சனம்.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் பெருந்தோட்ட மக்களுக்கு தீபாவளி முற்பணமாக 6,500 ரூபா வழங்கப்பட்டது. ஆட்சிமாற்றத்தின் பின்னர் 3,500 ரூபா அதிகரிக்கப்பட்டு 10ஆயிரம் ரூபாவாக வழங்குமாறு தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன பணித்திருந்தார்.

அரசின் இந்தப் பணிப்பானது வெறும் வெற்றுவார்த்தையாக மாத்திரமே இருந்துள்ளது. இன்றுவரை எந்தவொரு தொழிலாருக்கும் 10ஆயிரம் ரூபா முற்பணம் வழங்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். கடந்த வருடம் தீபாவளிக்காகவே பெற்றுக்கொள்ளப்பட்ட ஆறாயிரம், ஏழாயிறம் ரூபா முற்பணத்தைச் செலுத்தும் அவலநிலையும் தொடர்ந்த வண்ணமே உள்ளது.

ஆண்டுகள் 200 கடந்துவிட்டாலும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதரம் இன்னமும் வறுமைக்கோட்டின் கீழ் தொடர்வதால் பொருளாதார ரீதியில் அவர்கள் எழுச்சிபெறமுடியாத சமூகமாகவே வாழ்கின்றனர். 1960களுக்கு முன்னர் மொத்த தேசிய உற்பத்தியிலும், அந்நிய வருமானத்தைப் பெற்றுக்கொடுப்பதிலும் முன்னிலைச் சமூகமாக பெருந்தோட்ட மக்களே இருந்தனர்.

இந்தச் சமூகத்தின் உழைப்பை உறிஞ்சிய ஆங்கிலேயரும் சரி, சுதந்திர இலங்கையின் அரசியல் தலைவர்களும் சரி உரிமைகள் அற்ற ஓர் அடிமைச் சமூகமாகவே கொண்டு நடத்தப்பட்டு வந்தனர்; வருகின்றனர்.

இந்திய வம்சாவளி மக்கள் இனத்துவ அடிப்படையில் இந்த நாட்டில் நான்காவது நிலையில் கணிக்கப்படுகின்றனர். இவர்களின் பொருளாதாரமும் நான்காம் தரத்தில்தான் உள்ளது. பொருளாதார ரீதியில் நோக்குமிடத்து ஏனைய சமூகங்களைவிட முற்றிலும் மாறுபட்ட விதத்தில் மலையக மக்களின் பொருளாதாரம் காணப்படுகின்றது. வாழ்வாதாரம் அவர்களின் மாதச் சம்பளத்திலேயே தங்கியுள்ளது. பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதியை முன்னிறுத்தி ஆரம்பித்த இந்த மக்களின் பொருளாதாரம் இன்று அதனை நம்பியுள்ளதால் மிக மோசமான நிலையில் தொடர்கிறது.

சுதந்திரத்திற்குப் பின்னரும், சுதந்திரப் போராட்டத்தின்போதும் தொழிற்சங்கங்களே இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கை நிலையைத் தீர்மானித்தும், பாதுகாத்தும் வந்துள்ளன, வருகின்றன. 1988ஆம் ஆண்டு குடியுரிமைச் சட்டத்தின் மூலம் 1948ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட இவர்களின் பிரஜா வுரிமை மீண்டும் வழங்கப்பட்டதன் பின்னரே அரசின் அபிவிருத்தித் திட்டங்களும், அதன் பார்வையும் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பக்கம் திரும்பியதுடன், மக்கள் சார் நலனில் அக்கறையும் ஓரளவு செலுத்தப்பட்டது.

படிப்படியாகப் பெற்றுக்கொண்ட பிரதிநிதித்துவமும், பேரம் பேசும் தொழிற்சங்க சக்தியுமே இந்த மக்களை அரசின் பங்கு தாரர்களாகச் சேர்த்துக்கொள்ள வழிவகுத்தது. தொழிற்சங்கங்கள் அடிப்படையில் மலையக மக்களை முன்னிறுத்தி பேரம் பேசும் சக்தியாக வலுவடைந்ததால் இவர்களின் பொருளாதார நலனில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து பிரிக்கமுடியாத சக்தியாக உருவெடுத்தன.

1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறையின் காரணமாக இந்திய வம்சாவளி மக்களின் பிரதிநிதித்துவங்கள் மாகாண, உள்ளூராட்சி மட்டத்தில் ஓரளவு கிடைக்கப்பெற்றதால் காலங்காலமாகத் தட்டிக்கழிக்கப்பட்டுவந்த இந்த மக்களின் அடிப்படை பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மாகாணசபை, உள்ளூராட்சிசபைகளில் கேள்வியெழுப்பப்பட்டது.

1972முதல் 1992ஆம் ஆண்டுவரை தோட்டங்கள் தனியாரிடமிருந்து பறிக்கப்பட்டு அரசுடமையின் கீழ் கொண்டுவரப்பட்டமையால் இவர்களின் பொருளாதார நலன்களில் அரசு ஓரளவு அக்கறைகொண்டிருந்தது. வாக்கு வேட்டைக்காவது அரசு அவ்வப்போது ஒருசில திட்டங்களை மலையகத்தில் முன்னெடுத்தது. 1992ஆம் ஆண்டின் பின்னர் முழுமையாகத் தோட்டங்கள் தனியார் முதலாளிமார்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் காரணமாக அரசு பெருந்தோட்ட மக்களின் நலன் தொடர்பில சிந்திக்கவேயில்லை. காரணம், அரசு வகித்த இடத்தை தொழிற்சங்கங்கள் தலைமைதாங்கத் தொடங்கியமையே.

1977ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சி உருவானதால் இங்கு முதலாளித்துவத்தை முதன்மைப்படுத்திய திறந்த பொருளாதாரத் திட்டங்களும், கொள்கைகளும் கொண்டுவரப்பட்டன. இதன் காரணமாகத் தோட்டப்புற மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றனர்.

தோட்டங்கள் தனியார் உடமையாக்கப்பட்டபோது வெற்று மத்தாப்புக்காகத் தோட்டக் கம்பனிகள் தொழிலாளர் நலன் சார்ந்து செயற்படுவதுபோல் காட்டிக்கொண்டன. மறுபக்கத்தில் ஒட்டுமொத்த வருமானத்தையும் ஆங்கிலேய காலனித்துவத்தில் போன்று சுரண்டிக்கொண்டன; சுரண்டிக்கொண்டிருக்கின்றன.

நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் இந்த மக்களின் பங்கு கணிசமாக உள்ள நிலையிலும், இன்றுவரை இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளப் போதுமான பொருளாதார சக்தியை அரசும் கொடுக்கவில்லை, கம்பனிகளும் கொடுக்கவில்லை. குறிப்பாக, 1960களில் மொத்த தேசிய உற்பத்தியில் 60வீதமான அந்நிய வருமானம் பெருந்தோட்டங்களில் இருந்தே கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கான தரவுகள் தொகை மதிப்பு புள்ளிவிவரவியல் திணைக்களத்தில் உள்ளது. இன்று 27 வீதமாக இந்தத் தொகை குறைவடைந்துள்ளது. இதற்கு காரணம் தொழிலாளர்கள் அல்ல என்பது உண்மை.

தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைத் தீர்மானிக்கும் தற்போது நடைமுறையில் உள்ள கூட்டு ஒப்பந்தம் நீண்ட இழுபறிக்கு மத்தியில் 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி கைச்Œõத்திடப்பட்டிருந்தாலும் இன்று அந்த ஒப்பந்தத்தில் எந்தவொரு பிரதிபலனையும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனுபவிக்கவில்லை.

ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போது 730 ரூபா சம்பளத்தை ஒரு நாளைக்குப் பெறும் வகையிலேயே சரத்துகளும், ஏற்பாடுகளும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இன்று 18 அல்லது 20 கிலோவிற்கு மேல் கொழுந்தைப் பறித்தால்தான் குறிப்பிட்ட சம்பளத்தொகையைப் பெறமுடியும். காலநிலை மாற்றம், பௌதீக தாக்கம், பராமரிப்பதில் வினைத்திறன் இன்மை உள்ளிட்ட காரணிகளால் தேயிலை உற்பத்தி கடந்த காலத்தில் வீழ்ச்சிப் போக்கில் பயணித்ததால் கம்பனிகள் முன்னர் வழங்கியதையும் விட குறைவான சம்பளத்தையே வழங்கிவருகின்றன.

இவ்வாறான சூழலிலேயே நாளைய தீபாவளித் திருநாளை பெருந்தோட்ட மக்கள் எதிர்க்கொள்கின்றனர். பெரும்பாலான தோட்டங்களில் தீபாவளி முற்பணம் இன்றுவரை கிடைக்கவில்லை. இதற்கு அரசியல்வாதிகள் எடுத்த நடவடிக்கைதான் என்ன?

இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தலைமையில் கடந்த வாரம் கூடிய தொழிற்சங்கக் கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமான 10ஆயிரம் ரூபாவை முதலாளிமார் சம்மேளனம் உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

அதுபோல், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம், முதலாளிமார் சம்மேளனம் 10ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதுதான் மலையக அரசியலின் சமகாலப் போக்கு. ஆயிரம் ரூபாவை பெற்றுத் தருகிறோம் என்று கூறிய மலையகத் தலைமைகள், 730 ரூபா என்ற குறைவான சம்பளத்தையே பெற்றுக்கொடுத்தனர். 730 ரூபாவைப் பெறவேண்டும் என்றால் விடுமுறை தினங்கள் தவிர்ந்து ஒருவர் மாதத்தில் 21 நாட்களுக்கு அதிகமாக வேலை்செய்திருக்க வேண்டும். இதுதான் முதலாளித்துவத்தின் சர்வாதிகாரம்.

கடன் அடிப்படையில் வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தையே கம்பனிகளிடம் இருந்து இவர்களின் பேரம் பேசும் சக்தியால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. நல்லாட்சி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவரும் மலையகத் தலைமைகள் தீர்க்கமான சில அழுத்தங்களைக் கொடுக்கவேண்டிய காலகாலட்டத்தில் உள்ளனர். ஆட்சிமாற்றம் நிகழ்ந்து இரண்டரை வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், அதன் பலனில் பெருந்தோட்ட மக்கள் எதனை அனுபவித்துள்ளனர்?

2016ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி வீழ்ச்சிப் பாதையில் பயணித்திருந்தாலும் 2017ஆம் காலாண்டில் உலக சந்தையில் தேயிலையின் விலை அதிகரித்துள்ளது. கொழும்பு தேயிலை ஏலத்தில் கடந்த ஜூலை மாதம் தேயிலை உற்பத்திக்கு 591.54ரூபா சராசரியாக அதிகரித்துள்ளது. அது 2016ஆம் ஆண்டிலும் பார்க்க 30வீத அதிகரிப்பாகும். மலைநாட்டு தேயிலையின் விலையே கணிசமாக அதிகரித்ததாக கொள்வனவாளர்கள் கூறியிருந்தனர்.

கடந்த ஏழு மாதங்களுக்கு முன்னர் சர்வதேச சந்தையில் 2.95 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட தேயிலையின் விலை தற்போது 4.3 டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்தியா, கென்யா போன்ற முன்னணி தேயிலை உற்பத்தி நாடுகளில் தொடர்ந்து நிலவிவரும் காலநிலை சீர்க்கேடுகள் மற்றும் உற்பத்தியில் சடுதியாக ஏற்பட்டுவரும் வீழ்ச்சியின் காரணமாக இலங்கையின் தேயிலைக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.

தேயிலை விலை என்னதான் அதிகரித்து, கம்பனிகளும், அரசும் வருமானத்தைப் பெற்றுக்கொண்டாலும் அதன் பிரதிபலன் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. கணிசமான அளவு தேயிலையின் விலை அதிகரித்தும் கடன் அடிப்படையில் வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தைக்கூட வழங்க முதலாளிமார் சம்மேளனம் தயாராக இல்லை.

பெருந்தோட்ட தொழில்முறைமை பாரிய சர்வாதிகாரப் போக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது. இதனை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டிய தேவையை மலையக அரசியல் தலைமைகள் உணர்ந்துள்ளனவா?

1992ஆம் ஆண்டு தோட்டங்களைத் தனியார் உடமையாக்குவதற்கு முன்னர் அரச நிர்வாகத்தின் கீழ் விரும்பியோ விரும்பாமலோ பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார விடயங்களிலும் அரசின் பார்வை கட்டாயம் செலுத்தப்பட வேண்டியதாக இருந்தது. ஆனால், தனியாரின் கீழ் தோட்டங்கள் öŒன்றமையால் இவர்களின் அடிப்படை தொழில் உரிமைகளும் இன்று கேள்விக்குறியாகியுள்ளன. சர்வதேச தொழில் சட்டங்கள், தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசும் இந்நாட்டில் எவ்வித தொழிலாளர் உரிமைகளையும் அனுபவிக்காது தோட்டத் தொழிலாளர்கள் தமது இரத்தத்தை சிந்தி உழைத்துவருகின்றனர்.

எனவே, இங்கு கறுப்புத் தீபாவளியைத் தவிர வேறு எதனையும் கொண்டாட முடியாது. இந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்பாடடையச் செல்வற்கு அரசின் பங்களிப்பும் மத்தியஸ்தமும் கட்டாயமானதாகும். வெறும் வாக்குவேட்டைக்காக மட்டும் பயன்படுத்தப்படும் இந்த மக்களின் இருண்ட வாழ்வுக்கு வெளிச்சம் வேண்டும். பெருந்தோட்ட மக்களின் அவல வாழ்வை எத்தனை முறை எடுத்துரைத்தாலும் அரசு கண்டுகொள்வதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.Tuesday, October 10, 2017

70ஆகியும் ஏமாறும் தமிழர்கள்


இலங்கை நாடாளுமன்றம், தனது 70ஆவது பிறந்த தினத்தை அண்மையில் கொண்டாடியது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அந்த விசேட அமர்வு, இரண்டு மணித்தியாலங்கள் மட்டுமே இடம்பெற்றது.

அமர்வுக்கான யோசனையை,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்வைக்க, எதிர்க்கட்சி தலைவர் நகர்த்தினார், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முதலாவதாக உரையாற்றினார். பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனநாயக முறையையும் நாடாளுமன்ற ஆட்சிமுறைமையையும் பாராட்டினர். எனினும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவும் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்கவும் வழமைபோலவே, ஜனநாயக ஆட்சி முறைமையையும், நாடாளுமன்ற ஆட்சியமைப்பையும் கடுமையாக விமர்சித்தனர்.

சார்க் நாடுகளின் சபாநாயர்கள், தூதுவராலயங்களின் அதிகாரிகள், பொது மக்களென, சபாநாயகர்கலரியும், மக்கள்கலரியும் நிரம்பியிருந்த நிலையில், மிகவும் கோலாகலமான முறையிலேயே, அந்த சிறப்பு அமர்வு இடம்பெற்றது. இலங்கையில் நாடாளுமன்ற ஆட்சிமுறை உருவாக்கப்பட்டு, 70 ஆண்டுகள் கடந்துவிட்டன. உண்மையான ஜனநாயக ஆட்சிமுறை என்பது நாடாளுமன்றம் அதியுயர் அதிகாரம்மிக்க சபையாகக் காணப்படுவதையே குறிக்கின்றது. ஜனநாயக  ஆட்க் குப் பெயர்போன நாடுகளில் ஆரம்பகாலத்தில் இலங்கை குறித்து பேசபட்ட வரலாறுகள் அதிகம்.

இலங்கை நாடாளுமன்றத்திற்கு 70ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் வரலாற்றில் பல விடயங்கள் கறைபடிந்ததாகவும், கரும்புள்ளிகளாகவும், பிற்போக்குவாத சிந்தனைகள் நிறைந்த கருத்துகளமாகவுமே இருந்துள்ளன. இலங்கையை விட பல ஆண்டுகள் கடந்து ஜனநாயக ஆட்சியை பின்பற்ற தொடங்கிய நாடுகள்கூட இன்று சுதந்திரத்தின் சொர்காபுரியாகவும்,  தமது நாடுகளில் வாழும் அனைத்துச் சமூகங்களின் உரிமைகளை அரசமைப்பு ரீதியில் பிரதிபலிப்பானவாகவும் உள்ளன.

ஆரம்பகால கிரேக்கத்தில் மன்னராட்சி மக்கள் புரட்சியால் நேரடி மக்கள் ஆட்சியாக மாறியது போல் இலங்கையில் மன்னராட்சியின் பரிணாம வளர்ச்சி கம்சபா எனப்படும் கிராமிய சபை ஆட்சி மலர்ந்தது. 15ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசரும், 16ஆம் நூற்றாண்டில் ஒல்லாந்தரும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆட்சிசெய்திருந்தபோது அக்காலகட்டத்தில் ஐரோப்பியாவில் நிலவிய தேசா திபதி ஆட்சிமுறை தொடர்பில் அனுபவங்கள் இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றன.

1815ஆம் ஆண்டு முழுமையாக ஆங்கிலேயக் காலனித்துவத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட இலங்கையில் மெல்ல மெல்ல ஜனநாயக ஆட்சிக்கானபாதை திறக்கப்பட்டது.  அதன் முதல் படியாக 1833ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கோல்பு×க் கெமரன் ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி பிரித்தானிய  இலங்கை முதலாவது சட்டமன்றம், நிறைவேற்றுப் பேரவை மற்றும் சட்டவாக்கப் பேரவை ஆகியன உருவாக்கப்பட்டிருந்தன.

1931ஆம் ஆண்டு 101 உறுப்பினர்களுடன் அரச சபை நிறுவப்பட்டது. இதற்கான உறுப்பினர்கள் டொனமூர் அரசமைப்பின் மூலம் இன, சாதி, மதம், பால் என்றே தேர்ந்தெடுக்கப்பட்டனர். டொனமூர் யாப்பில் முதல் முறையாக சர்வஜன வாக்குரிமையும் வழங்கப்பட்டிருந்தது. பின்னர் 1947 ஆம் ஆண்டில் சோல்பரி ஆணைக்குழுவின் பரிந்துரைப்படி, அரசசபை கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக  இரண்டு சபைகளைக் கொண்ட நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையை ஒத்த செனட் சபை என்ற மேலவையும், பிரதிநிதிகள் சபை என்ற கீழவையும் இவ்வாறு அமைக்கப்பட்டன.  இதுதான் இலங்கையர்கள் அன்று பெற்றிருந்த அரசியல் அனுபவமாகும்.

ஆங்கிலேயக் காலனித்துவத்தில் இலங்கையர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் செயற்பட்டிருந்ததன் விளைவாகவே சுதந்திரப் போராட்டத்திலும் கைகோர்த்து சுதந்திரத்தை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது. 

1947ஆம் ஆண்டு நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தப் பின்னர் நடத்தப்பட்ட முதலாவது தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது. முதல் சுதந்திர இலங்கையின் பிரதமராக டி.எஸ். சேனா நாயக்க தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன், முதல் சபாநாயகராக பிரான்ஸிஸ் மொலமுரே தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகளும் ஐ.தே.கவுக்குப் பூரண ஆதரவை வழங்கியிருந்தன. தற்போது ஜனாதிபதி செயலகமாகவுள்ள பழைய நாடாளுமன்றம் சுதந்திர இலங்கையின் அடையாளமாக இன்றும் கருதப்படுகிறது. இலங்கை சுதந்திரமடைந்த போது அன்று நாடாளுமன்றத்தில் வெடிக்கப்பட்ட வான வேடிக்கைகளைக் கண்டு இலங்கையர் என்று பெரும் மகிழ்ச்சிக் கொண்டதாக தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 70ஆவது ஆண்டு விசேட நாடாளுமன்ற அமர்வின்போது உருக்கமாகத்  தெரிவித்திருந்தமை அனைவரின் கவத்தையும் ஈர்த்திருந்த விடயமாகியிருந்தது.

சுதந்திர இலங்கையில்தான் இலங்கையர் என்ற அடையாளத்தை தமிழ்,முஸ்லிம் மக்கள் மெல்ல மெல்ல இழக்க நேரிட்டது. டி.எஸ். சேனாநாயக்க, டட்லி சேனா நாயக்க,எஸ்.டப்ளியூ.ஆர்.டி.பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ என இலங்கையை ஆண்ட ஒவ்வொரு தலைவர்களின் காலத்திலும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டமையே வரலாறு.

உயரிய ஜனநாயக சபையாகவும், மக்களாட்சியின் உறைவிடமாகவும் கருதப்பட்ட நாடாளுமன்றத்தில்தான் தமிழ் மக்களின் உரிமைகளை காலத்துக்கு காலம் இல்லா தொழிக்கப்பட்டது. இலங்கை சுதந்திரம் அடைந்த ஆண்டே குடியுரிமைச்சட்டதின் மூலம் டி.எஸ்.
சேனாநாயக்க, அன்று இலங்கைக்கு அந்நிய வருமானத்தை உழைத்துக் கொடுத்துவந்த மலையகத் தமிழர்களின் குடியுரிமையை பிரஜாவுரிமைச் சட்டத் தின் மூலம் பறித்தார். 
1956ஆம் ஆண்டு எஸ்.டபிளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் ஆட்சி இலங்கையில் பௌத்த தேசியவாதிகளுக்கும், பேரினவாதிகளுக்கும் ஒரு பொற்காலமாக அமைந்திருந்தது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தனிச்
சிங்களச் சட்டத்தை நிறைவேற்றி தமிழ் மொழிக்கான சமவுரிமையை முதல் முதலில் இந்த நாட்டில் இல்லாதொழித்திருந்தது.

பண்டாரநாயக்கவுடன் அன்றை தமிழ் தலைமைகள் மேற்கொண்ட அனைத்து நல்லிணக்க முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்திருந்தன. தமிழர்களுக்கும், சிங்களவர்களுகுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட முதல் சமாதான சாசனம் எனப்படும் பண்டாசெல்வா உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டமை இலங்கை நாடாளுமன்றம் மீது வீழ்ந்த முதல் கரும்புள்ளியாகவும் அமைந்தது.
மாவட்ட முறையின் கீழ் அதிகாரத்தை கோரிய தமிழ் மக்கள் பிற்காலத்தில் ஆயுதமேந்திப் போராட வழிவகுத்ததில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தச் சட்டங்கள் முக்கியமானவை. டட்லிசெல்வா ஒப்பந்தமும் அவ்வாறே தோல்விய டைந்த உடன்படிக்கையாக மாறியிருந்தது.

1972ஆம் ஆண்டு காலனித்துவத்தில் இருந்து விடுபடும் வகையில் சிறிமாவோ பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்ட முதலாம் குடியரசு யாப்பு முற்றுமுழுதாக அன்றுவரை சோல்பரி அரசமைப்பின் காணப்பட்ட  சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை தகர்த்தெரிந்திருந்தமை மாத்திரமல்ல அதிகாரங்கள் அனைத்தையும் பெரும்பான்மையினரின் வசம் கொண்டு சென்றிருந்தது.

1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவால் கொண்டுவரப் பட்டிருந்த 2ஆம் குடியரசுயாப்பு தமிழ் மக்களைப் பிரிவினைவாத்திற்கு தூண்டில் போட்டு இழுத்திருந்தது. அதிகாரப் பகிர்வுக்காக மூன்று முறை கையாளப்பட்ட யுத்திகளும் தோல்விகண்டதன் விளைவாகதான் இலங்கை பாரதூரமான யுத்த மொன்றுக்கு முகங்கொடுக்க நேரிட்டிருந்தது. 1987ஆம் ஆண்டு புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்குமாறு கோரி ஓர் இணக்கப்பட்டாட்டுடன் தமிழர்களின் ஆதரவின்றி இந்திய  இலங்கை அரசுகளின் இராஜதந்திர நகர்வுகளில் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களை ஏமாற்றியதாலேயே  உள்நாட்டு போரும் உச்சகட்டம் நோக்கி நகர்ந்திருந்தது.

1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் சந்திரிகா குமாரதுங்கவின் காலத்திலும் 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் காலத்திலும் சமாதானம் குறித்து பல பேச்சுகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக திம்பு பேச்சு, 2002இல் ஒஸ்லோவில் நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன் செய்துகொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கை, இந்திய அரசின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் என அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தன.

2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும்கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுகள் அதிகாரப் பகிர்வு குறித்து இடம்பெற்றிருந்தன. நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை வைத்திருந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு கடுமையான இனவாதப் போக்கில் தமது செயற்பாட்டை முன்னெடுத்தன் விளைவாக பன்நாட்டு சமூகத்தின் மத்தியில் தோல்விகண்ட அரசாகவும் தமிழ் மக்களைத் தொடர்ந்து அடிமைப்படுத்திய அரசாகவும் மாறியிருந்தது.

யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த வேளையில் பல சர்வதேச நாடுகள் இலங்கைக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்ததுடன், இலங்கைக்கு 2009ஆம்ஆண்டு நம்பர் பகுதியில் விஜயம் மேற்கொண்டிருந்த பான் கி மூன் தலைமையிலான ஐ.நா வின் இடைக்கால மீளாய்வு குழுவும் இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு கைகொடுப்பதாக வாக்குறுதியளித்துச் சென்றிருந்தது.

ஆனால், பின்னர் வெளியான யுத்தக்குற்றச்                சாட்டுகள் மற்றும் மஹிந்த அரசின் சர்வதேச எதிர்ப்பு போக்கால், மஹிந்த ஆட்சியானது 2015ஆம் ஆண்டுவரை தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையில் ஆட்சிமாற்றமொன்று நிகழ்ந்திருக்காவிடின் அவ்வாண்டு மார்ச்மாதம் வரவிருந்த போர்க்குற்ற விசாரணை அறிக்கையில் இலங்கைக்குப் பொருளாதார தடையொன்றை விதிக்கக்கூடிய வாய்ப்பும் இருந்ததாக பரபரப்பாக சர்வதேச அரசியலில் பேசப்பட்டிருந்த விடயமாகும்.

இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு 70ஆண்டுகள் பூர்த்தியென்பதை இலங்கையர் களாக அனைவரும் கொண்டாட முடியாதசூழல் காணப்பட்டமைக்கு இந்த கருமைபடிந்த வரலாறே காரணமாகும். ஆங்கிலேயக் காலனித்துவம் முதல் நாம் ஜனநாயக நாடாளுமன்ற ஆட்சிமுறைக்கு மாறியிருந்தாலும் இன்றுவரை இந்த நாட்டில் ஜனநாயகத்தின் காற்று வீசவில்லை என்பது யதார்த்தமாகும். 

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க 70ஆண்டு நாடாளுமன்ற விசேட அமர்வில் உரையாற்றும்போது, யுத்தம் ஏற்பட்டதால் ஜனநாயகம் இல்லாதுபோகவில்லை. மாறாக ஜனநாயகம் இல்லாது போனமையால்தான் யுத்தமொன்று ஏற்பட்டது எனக் கூறியிருந்தார். இலங்கையர்களாக ஒன்றிணைந்து 70ஆவது ஆண்டை மட்டுமல்ல இதுவரை எந்வொரு அரசு விழாவையும் கொண்டாட முடியாத வரலாறுகளே தொடர்கின்றன.

197080களில் லத்தின் அமெரிக்க நாடுகளின் பின்னர் அங்கு மலர்ந்த அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக மறுசீரமைப்புகளால் இன்று ஜனநாயகத்தின் உரிமைகளை அனுபவிக்கும் நாடுகளாக சில லத்தின் அமெரிக்க நாடுகள் உள்ளன. குறிப்பாக சிறந்த ஜனநாயகம் அம்சங்களுக்கு உலகில் உதாரணம் காட்டும் நாடாக ஆர்ஜன்டீனா காணப்படுகிறது.

அத்தகைய ஒரு ஜனநாயகத்தைதான் இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களும் எதிர்பார்க்கின்றனர். சுதந்திரம் பெற்றும், நாடாளுமன்ற ஆட்சி உருவாக்கப்பட்டு ஏழு தசாப்
தமும் கடந்துவிட்டன. இன்னமும் எந்தவொரு
சிங்கள தலைமையும்; அதிகாரத்தை பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை. தற்போதைய நல்லாட்சி அரசு புதிய அரசமைப்பொன்றை கொண்டுவர தீவிர முயற்ச்சியில் இறங்கியுள்ளது.

ஆனால், தெற்கில் உள்ள சில இனவாத பிற்போக்குவாதிகளால் அந்த முயற்ச்சியை தோற்கடிக்க பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றில் சமர்ப் பிக்கப்பட்டுள்ள அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கையில் இலங்கை என்பது ஒருமித்த நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், ஒற்றையாட்சியின் தாரக மந்திரம் மாற்றப்படாது என்று அரசு உறுதியாக அறிவித்து வருகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் இந்த நகர்வுகளும் தோல்விகாணப்போகும் தீர்வாக அமைந்துவிடுமோ என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

2015ஆம் ஆண்டுக்குப் பின்னராக இரண்டு வருடங்கள் என்பது ஒரு சவால்மிக்க பயணமாக இருந்தாலும், அதன் பிரதிபலன் என்னவென்று வருட இறுதிக்குள் வெளியாகும் என்று தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். மீண்டும் இந்த நாடாளுமன்றம் கறைபடிந்த சபையாக மாறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(சு.நிஷாந்தன்)

மஹிந்தவின் தாமரை மொட்டால் சீனாவின் கோபுரத்துக்கு ஆபத்து


சீனாவின் பாரிய மூலதன உதவியுடன் தலைநகர் கொழும்பில் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் "தாமரைக் கோபுரம்' இந்த வருட இறுதிக்குள் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டிருக்கின்றபோதிலும் அதைத் திறப்பதால் சில சிக்கல்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்படும்.

ஏழு மாடிகளைக்கொண்ட ஆசியாவின் மிக உயரமான கட்டடமாகக் கட்டப்பட்டுவரும் இந்தக் கோபுரத்தில் 50 தொலைக்காட்சி சேவைகள், 35 வானொலி நிலையங்கள் மற்றும் 20 தொலைத்தொடர்பு வழங்குநர்களுக்கான கட்டமைப்பு என்பவற்றுடன் பல்வேறு சுற்றுலா அம்சங்களுடனான நட்சத்திர விடுதிகளும் அமையவுள்ளன.

சீன தேசிய எலொக்ட்ரோனிக் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கூட்டமைப்பாலும், சீன விண்வெளி வர்த்தக விரிவாக்க அமைப்பாலும் 599 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் "தாமரைக் கோபுரம்' நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்தக் கோபுரம் பற்றி இலங்கையர்கள் அறிந்திராத பல்வேறு இராஜதந்திர தகவல்கள் சர்வதேச அரசியலில் அலசி ஆராயப்பட்டு வந்தாலும் இந்தியாவைத் தவிர வேறு நாடுகள் தாமரைக் கோபுரத்துக்கு நேரடியான எதிர்ப்பை வெளியிட்டிருக்கவில்லை. இது சீனாவுக்கு மேலும் உந்துசக்தியாக அமைந்துவிட்டது.

"தாமரைக் கோபுரம்' சீனாவால் கட்டப்படுகிறது. இதன்மூலம் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துள்ளது என்றே இலங்கையில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கடந்த அரசின் காலத்தில் இதற்கு அனுமதியளிக்கப்பட்டிருந்ததால் முன்னாள் அரசில் உயர்பதவியில் இருந்தவர்கள் "தாமரைக் கோபுரம்' பற்றி தற்போதும் எதுவித கருத்துகளும் தெரிவிப்பதில்லை.
இந்தியப் பெருங்கடலின் வர்த்தக மற்றும் சர்வதேச அரசியல் விடயங்களில் "தாமரைக் கோபுரம்' பெரும் தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய அபாயம் உள்ளமையால் இந்தியா இந்தக் கோபுரத்தைக் கட்டுவற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இந்தியப் பெருங்கடல் வர்த்தக மற்றும் பூகோள நகர்களை நேரடியாக கண்காணிக்கமுடியும் என்பதால் தெற்காசிய நாடுகளில் சுதந்திரத்துக்கு சவால் விடும் காரணியாகப் பேசப்பட்டாலும், இதனைவிட பெரும் காரணமாக அமைந்துள்ளது.

தமிழகத்தின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள இந்திய பாதுகாப்பு கடற்படை முகாமை நேரடியாக இதிலிருந்து பார்க்கமுடியும் என்பதாகும். 324 அடி உயரமாகவுள்ளது பிரான்ஸில் அமைந்துள்ள ஈபில் டவரைவிட 26 அடி உயரமாக "தாமரைக் கோபுரம்' கட்டப்பட்டு வருகிறது. இதுவே இந்தியாவின் அச்சத்துக்குக் காரணமாகும்.
பகிரங்கமாக "தாமரைக் கோபுரம்' அமைக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு டில்லியிலிருந்து கொழுப்புக்கு கடும் அழுத்தம் கொடுத்தமையால் டில்லிக்கும் கொழும்புக்குமான உறவும் கடந்த அரசின் இறுதிக் கட்டத்தில் முறிவுற்றிருந்தது.

மறுபுறத்தில் சர்வதேச ரீதியில் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகமுக்கும் "தாமரைக் கோபுரம்' மீது தொடர்ந்து தனது கழுகுப் பார்வையைச் செலுத்தியவண்ணமே உள்ளது. இந்தியப் பெருங்கடலின் நடுப்பகுதியில் நிலநடுக்கோட்டுக்கு தெற்கே அமைந்துள்ள அமெரிக்காவுக்குச் சொந்தமான டீக்கோ கார்சியா ஒரு பவளபாறைத் தீவாகும்.
இங்கிலாந்துக்குச் சொந்தமான இந்தத் தீவை 1965ஆம் ஆண்டில் இங்கிலாந்திடமிருந்து அமெரிக்கா குத்தகைக்கு வாங்கியது. இத்தீவில் கடற்படை, விமானப் படைக்குத் தளங்களை அமைத்து இராணுவ மயமாக்கியது அமெரிக்கா. கார்சியா இந்தியாவின் தென்முனையான கன்னியாகுமரியிலிருந்து தென்மேற்கே 1,796 கி.மீ. தூரத்திலும் ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையிலிருந்து 4,723 கி.மீ. தூரத்திலும் தான்சானியா கரையின் கிழக்கே 3,535 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது.

பெரும் கடற்படைக் கப்பல் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உதவித் தளம், படைத்துறைத் தேவைக்கான விமானப் படைத் தளம், தகவல் தொடர்பு, விண்வெளித் தொடர்புத் தளம் ஆகியவை இங்கு உள்ளன. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. இங்கு அந்நிய நாடுகளை உளவு பார்க்கும் நவீன மையத்தை வைத்துள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகம், தாமரைக் கோபுரம், போர்சிட்டி இவை மூன்றும் உலகின் நாலாபுறத்தை இராஜதந்திர ரீதியாக கண்காணிக்கவே சீனா நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச அரசியலில் பேசப்பட்டதால் பெண்டகமும் தாமரை கோபுரம் மற்றும் இலங்கையில் சீனா முன்னெடுக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து கழுகுப்பார்வை செலுத்திவருகிறது.

இவற்றுக்கு மத்தியில் வருட இறுதியில் திறந்துவைக்கப்பட தீர்மானிக்கப்பட்டிருந்த தாமரைக் கோபுரத்தை திறந்துவைப்பதில் அரசுக்கு மற்றுமொறு சிக்கல் தோன்றியுள்ளது.
முன்னாள் வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய கட்சியான பொதுஜன பெரமுன கட்சியின் சின்னமாக தாமரை மொட்டே காணப்படுகிறது. இச்சின்னத்தில்தான் மஹிந்த தலைமையிலான எதிரணியினர் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட அதிகளவாக வாய்ப்புகள் காணப்படுகின்றன.

வருட இறுதியில் தாமரை மொட்டு கொழும்பில் மலர்ந்தால் அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் தாமரை மொட்டு தொடர்பில் கருத்தாடல்கள் நாட்டின் நாலாபுறத்திலும் ஏற்படுமானால் தாமரை மொட்டுக்கு பிரபல்யம் தேர்தல் நேரத்தில் அதிகரிக்கக்கூடும். அது தேர்தல் முடிவுகளுக்கு சிலவேளை எதிர்மறையாகவும் அமையும் என்ற அச்சத்தில் தாமரை கோபுர திறப்பு விழாவை 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் செய்வதற்கு அரசு யோசித்து வருகிறது.

முன்னாள் அரசின் காலத்தில் செய்யப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் முக்கியமானதாகவும் தாமரைக் கோபுரம் காணப்படுகிறது. ஆகவே, தற்போதைய அரசியல் நிலவரப்படி தாமரை மொட்டு கொழும்பில் மலர்வதில் சிக்கல் நிலைதான்.

(சு.நிஷாந்தன்)

Sunday, September 3, 2017

அரசுக்குத் தலையிடியாகும் 20ஆவது திருத்தம் சிந்திக்க வேண்டிய சிறுபான்மையினங்கள் : சு.நிஷாந்தன


அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் மாகாணசபைகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவதால் அரசுக்கு அது பேரிடியாக மாறியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தனது கட்டுப்பாட்டிலுள்ள மாகாண சபைகளில் 20ஆவது திருத்தச்சட்டமூலம் தோல்வியடைவது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் தலையிடியாக மாறியுள்ளது.

இலங்கையில் காணப்படும் ஒன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்களின் அதிகாரம் சு.கவின் கைவசமே உள்ளது. தேசிய அரசின் பங்காளிக் கட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒரு பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒரே தினத்தில் தேர்தலை நடத்தும் வகையில் மேற்படி 20ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ளது.

இறுதியாகத் தேர்தல் நடைபெற்ற ஊவாமாகாணத்தின் ஆட்சி 2019ஆம் ஆண்டுவரை உள்ள சூழலிலேயே 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றி மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசு ஒரே தினத்தில் நடத்த எண்ணியுள்ளது. மாகாணசபைகளின் ஆதரவின்றி 20ஐ நிறைவேற்றுவது அரசுக்கு சிம்மசொப்பனமாகும். நாடாளுமன்றில் தேசிய அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்பட்டாலும் மாகாணசபைகளின் அங்கீகாரம் பெறப்படாமல் 20ஐ நிறைவேற்றுவது சு.கவுக்கு கூர்மையான கத்தியில் நடப்பதற்கு ஒப்பானது.

20ஆவது திருத்தம் வெறுமனே தேர்தலை மாத்திரம் மையப்படுத்திய சட்டமூலம் அல்ல. தற்போதைய சூழலில் சு.கவின் பலம் மீது செல்வாக்குச் செலுத்தும் அம்சமாகவும் அது உள்ளது. 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சு.கவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிர்க்கட்சியெனப்படும் மஹிந்தவின் அணியிலேயே உள்ளனர். சு.கவின் மக்கள் செல்வாக்கு மைத்திரியிடமா மஹிந்தவிடமா உள்ளது என்ற கருத்துகளும் தற்போது மேலோங்கியுள்ளதால் அது அதிகாரம் யாரிடம் உள்ளது என்பது குறித்த போட்டியாகவும் மாறியுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களும் சு.கவின் கட்டுப்பாட்டிலேயே அல்லது சு.கவின் ஆட்சியிலேயே நிலவுகிறது. இதுவரை ஊவா, வடமத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களில் 20ஆவது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மேல், சப்ரகமுவ மாகாணங்களில் சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முயற்சிக்கப்பட்ட போதிலும் சபையில் எழுந்த கடும் கலவரங்கள் மற்றும் கைகலப்புகள் காரணமாக குறித்த சட்டமூலம் செப்டெம்பர் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாணத்தில் மாத்திரமே இதுவரை 20இற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இழுபறியிலேயே காணப்படுகிறது. எதிர்வரும் செப்டெம்பர் முதல் இரண்டாம் வாரங்களில் அனைத்து மாகாணங்களிலும் சட்டமூலம் குறித்து பலப்பரீட்சை நடைபெறவுள்ளது. அதில் அரசு தோல்வியடையும் பட்சத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் மஹிந்த தலைமையிலான பொது எதிரணியின் கை ஓங்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாகவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தொடர்ந்து மாகாணசபைகளில் சட்டமூலம் தோல்வியடைந்துவருவதால் அதில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில் கடந்த திங்கட்கிழமை மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார். இதில் வடமாகாண முதலமைச்சர் மாத்திரம் பங்கேற்றிருக்கவில்லை. குறித்த சந்திப்பில் 20இன் குறைபாடுகள் மற்றும் அது குறித்த தமது நிலைப்பாடுகளை அறிவித்துள்ள முதலமைச்சர்களுக்கு மீண்டும் திருத்தங்களுடன் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் என்று ஜனாதிபதி அறிவுரை வழங்கியுள்ளார்.

20 ஆவது திருத்தம் உள்நாட்டில் மாத்திரமல்ல, சர்வதேசத்திலும் பேசுபொருளாக உள்ளது. எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் தேர்தல்களைப் பிற்போட முடியாது. தேர்தலைப் பிற்போடுவது மக்களாட்சி கோட்பாட்டுக்கு முரணானது. திருத்தங்களை காரணங்காட்டி தேர்தல்களை அரசு பிற்போடுவதற்கு இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவராலயங்கள் மூலம் அரசுக்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம், நல்லாட்சி, சிவில் உரிமைகள் என்று வாக்குறுதியளித்தே தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது.
உள்ளூராட்சிமன்றங்களின் ஆயுட்காலம் முடிவடைந்து அரச கட்டுப்பாட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் கடக்கவுள்ளன. எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் மக்களுக்கு நேரடியாக சேவைகளையும் மக்களுடன் நேரடியாகத் தொடர்பிலும் உள்ள அரச நிறுவனங்களினது சேவை நீண்டகாலத்திற்கு இடைநிறுத்திவைக்கப்படுவதில்லை. அது மக்களாட்சிக் கோட்பாட்டை முற்றிலும் மீறும் செயற்பாடாகும்.  ஆனால், இலங்கையை சுதந்திரத்திற்குப் பின்னர் ஆண்ட தலைவர்களின் இருப்புக்காகக் கொண்டுவரப்பட்ட அரசமைப்புகளும் அரசமைப்புத் திருத்தச்சட்டமூலங்களும் சிறுபான்மை இனங்களுக்குப் பெரும் அநீதியிழைப்புகளாக அமைந்தன.

அந்த விடயத்தை சரிசெய்யாவிடின் இந்த நாட்டில் சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும், அபிவிருத்தியையும், சகவாழ்வையும் ஏற்படுத்த முடியாது என்பதையும், நவீன ஜனநாயக கோட்பாடுகளை உள்வாங்காவிடின் சர்வதேச நாடுகளுடன் உறவுகொண்டாட முடியாது என்பதையும் மைத்திரி ரணில் தலைமையிலான தேசிய அரசு உணர்ந்துள்ளமையாலேயே பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஜனநாயக மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகின்றது.

1970ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் காணப்பட்ட தொகுதிவாரி தேர்தல் முறை உலகில் காணப்படும் சிறந்த தேர்தல் முறைகளில் ஒன்றாகக் காணப்பட்ட போதிலும் அது சிறுபான்மை மக்களுக்குப் போதிய பிரதிநிதித்துவத்தை வழங்கக்கூடியதாக இருக்கவில்லை. 1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரத்துடன் கூடிய ஜனாதிபதித் தேர்தல் முறைமை மற்றும் 1987இல் அறிமுகப்படுத்தப்பட்ட விருப்பு வாக்கு அடிப்படையிலான நாடாளுமன்ற, மாகாண சபை, உள்ளூராட்சிசபைத் தேர்தல் முறைகளால் இந்த நாடு பாரதூரமான இழப்புகளுக்கு முகங்கொடுத்து வருகிறது.

சிறுபான்மை இனங்களுக்கு இருந்த அனைத்து உரிமைகளும் 1978ஆம் ஆண்டுமுதல் குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன. பணத்தை முன்னிறுத்தி அமைந்த விருப்பு வாக்குத் தேர்தல் முறையால் ஜனநாயகம் சிதைந்துபோனமை மாத்திரமல்ல, பெரும்பான்மை தேசியவாதமும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

சுதந்திரத்திற்குப் பின்னராக 67வருடகாலம் இலங்கையில் இனவாத போர்க்களமாகவே தொடர்கிறது.  அதிலிருந்து மீண்டு நல்லிணக்கத்துடன் உலகை அரவணைக்க வேண்டிய தேவை இலங்கைக்கு எழுந்துள்ளது.
1970, 80களில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இராணுவ ஆட்சியும் மக்கள் அடக்குமுறையும் உச்சக்கட்டத்தில் நிலவியது. அந்த நாடுகளில் ஏற்பட்ட ஜனநாயக புரட்சிகளால் இன்று சுதந்திரத்தின் சொர்க்க புரியாக ஆர்ஜன்டீனா உள்ளிட்ட லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகள் உருவாகியுள்ளன. அதேபோல் நிறவெறி போராட்டத்திற்கு முகங்கொடுத்த தென்னாபிரிக்கா இன்று சிறந்த ஜனநாயக நாட்டுக்கு உதாரணம் காட்டும்வகையில் அமைந்துள்ளது. தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிப் பயணிப்பது காலத்தின் தேவையாகவுள்ளது.

தற்போதைய அரசு இலங்கையின் அரசமைப்பில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து அனைவரும் சமாதானத்துடன் வாழக்கூடிய வகையிலான பல்வேறு அரசியல், சமூகக் கட்டுமானங்களில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுவருகிறது. அதில் முக்கிய மூன்று விடயங்கள்தான் தேர்தல்முறை மாற்றம், புதிய அரசமைப்பொன்றை உருவாக்குதல் என்பதுடன், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல். தேர்தல்முறை மாற்றத்தில் அரசு முதலில் வெற்றியைக் கண்டுள்ளது. விகிதாசார முறையில் 40வீதமும், தொகுதிவாரி முறையில் 60வீதமும் பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் உள்ளூராட்சித் தேர்தல் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் மீண்டும் அரசியல் பிரதிநிதித்துவங்களை சிறுபான்மை இனங்களுக்கும் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது.

மாகாணசபைத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்தும் வகையில் அரசு எடுத்துள்ள முயற்சி வெறுமனே அரசின் இருப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சியாக மக்கள் எண்ணிவிட முடியாது. இந்த நாட்டில் விருப்புவாக்கு முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் தேர்தல்கள் அரசுகளின் தேவைகளுக்கேற்ப நடத்தப்பட்டமையால் ஏற்பட்ட விளைவுகள் எண்ணிலடங்காதாவை.

தேர்தல்களுக்காக கோடிக்கணக்கல் பணத்தைச் செலவழிக்கும் நபர்கள் மக்களுக்காக சேவை செய்வதை விடுத்து முதலில் அவர்கள் செலவழித்த பணத்தைத் தேடவே முயற்சிப்பார்கள். அடுத்தமுறை வெற்றிபெற முடியாது என்றால் இருக்கும்வரை கொள்ளையடித்துவிட்டுச் செல்வார்கள். இவற்றிலிருந்து மீண்டு தூய்மையான அரசியல் மற்றும் ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்கக் காத்திருக்கும் மக்கள் தற்போதைய அரசின் சில அரசியல் மறுசீரமைப்புக்கு விரும்பியோ விரும்பாமலோ பச்சைக்கொடி காட்ட வேண்டியது தலையாய கடமையாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிரணி மாத்திரமே இனவாதத் சித்தாந்தங்களை பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருந்து போகவிடாமல் தக்கவைத்து அரசில் இலாபம் தேட 20ஆவது திருத்தத்தின் தாற்பரியங்கள் குறித்து மக்களுக்குத் தவறான முன்னுதாரணங்களை எடுத்துரைத்து வருகின்றது. இலங்கையில் ஜனநாயக மறுசீரமைப்புகாக கடைசி சந்தர்ப்பமாக தற்போதைய அரசின் முயற்சிகள் பார்க்கப்படுகின்றன.

சுதந்திரத்திற்குப் பின்னர் நேர் எதிர் திசையில் பயணித்த சு.கவும், ஐ.தே.கவும் இன்று ஒன்றிணைந்து கூட்டரசை அமைத்து ஆட்சிசெய்து வருகின்றன. இலங்கையில் அனைத்து மக்களும் இலங்கையர்களாக வாழ எடுக்கப்பட்ட முயற்சிகளை இந்த இரண்டு கட்சிகளே மாறி மாறி ஒவ்வொரு காலப்பகுதியிலும் அதிகாரத்தைத் தம்வசம் வைத்துக்கொண்டு எதிர்த்திருந்தன. இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து இன்று எடுக்கும் அதிகாரப் பரவலாக்கம் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகள் தோல்விகண்டால் இந்த நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்தும் சந்தர்ப்பம் மீண்டுமொருமுறை வரலாறு கொடுக்காது என்பதே நிதர்சனம்.

20ஆவது திருத்தம் அரசையும் அரசின் பங்காளியான சு.கவுக்கும் பலப்ரீட்சையாகும். ஆனால், சிறுபான்மை சமூகங்களின் எதிர்காலமும் தற்போதைய தேசிய அரசிடம் உள்ளதால் எந்தக் கட்சிகளின் முயற்சிக்குப் பின்னால் நாம் பயணிக்கவேண்டியது எழுதப்படாத சட்டமாக மாறியுள்ளது. 20 என்பது வெறுமனே மாகாண சபைத் தேர்தல்களை ஒரேதினத்தில் நடத்தும் சட்டமூலமாக மாத்திரம் அமையாது. புதிய அரசமைப்பொன்று இன்னும் சிலமாதங்களில் கொண்டுவரப்படும் வேளையில் மாகாணங்களின் நிலைப்பாட்டை ஊகித்துக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது தோற்றம்பெற்றுள்ளது.

ஜனநாயகத்திற்கு சவால் விடுக்கும் வகையில் 20ஆவது திருத்தம் அமைந்தாலும் இலங்கையின் கடந்தகாலப் போக்கின் அடிப்படையில் அனைத்து மக்களும் ஆதரவளித்து எதிர்காலத்தில் உரிய முறையில் தேர்தல்களை மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் நடத்த முதல்படியாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை.
தேசிய அரசில் பல வெற்றிகளை சிறுபான்மை இனங்களால் பெற முடிந்துள்ளமையை மறுக்க முடியாது. முன்னாள் அரசின் காலத்தில் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியிலும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தனர். பொது மக்களின் காணிகள் தொடந்து இராணுவத்தின் கைவசமே இருந்தன. காணாமல்போனோர் குறித்து ஆக்கபூர்வமான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. போர்க்குற்றச்சாட்டுகளை ஆராய சர்வதேசத்திடம் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று மஹிந்த அரசின் அநீதிகளையும், ஒடுக்குமுறைகளையும் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ஆனால், தற்போதைய அரசு மஹிந்த அரசின் நடவடிக்கைகளால் சர்வதேசத்திடம் தோல்விகண்டதை உணர்ந்து 67 வருடகாலமாக தொடர்கதையாகவுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு, அபிவிருத்தி, நல்லிணக்கம், சமாதானம் போன்ற விடயங்களில் கரிசனை செலுத்தி ஓரளவுக்கேனும் வெற்றிகண்டுள்ளது.

எனவே, 20ஐ வெறும் திருத்தச்சட்டமூலமாகக் கருதி கண்டுகொள்ளாமல் விடுப்பதை விடுத்து ஜனநாயக மறுசீரமைப்பு பணியில் சிறுபான்மை இனங்கள் அரசுடன் ஓர் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் வாரம் குறித்த சட்டமூலம் வாக்களிப்புக்கு விடப்படவுள்ளது. அதன் தாற்பரியங்கள் இருக்குமாயின் மத்திய அரசின் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.

நாட்டில் அரசியல், அதிகார மறுசீரமைப்புகான காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் ஆழமாக சிந்தித்துச் செயற்பட வேண்டியது கட்டாயமாகும்.

இலங்கைக்கு பொருளாதார போர்முரசு; இரண்டு துருவங்கள் கடும் போட்டி: சு.நிஷாந்தன்


 (13.08.2017)
ஆசிய கண்டத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் அமைவிடத்தைப் பயன்படுத்தி பூகோள அரசியல் அபிலாஷைகள் மற்றும் பொருளாரத்தைப் பலப்படுத்திக்கொள்ள இந்தியாவும், சீனாவும் தொடர்ந்து தீவிர முனைப்புடன் செயற்பட்டுவருகின்றன.

அம்பாந்தோட்டை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதையடுத்து இந்தப் பனிப்போர் முற்றியுள்ளது. அம்பாந்தோட்டை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ள சூழலில் மறுபுறத்தில் இந்தியாவுக்கும், சீனாவுக்குமிடையில் எல்லைப் பிரச்சினையும் வலுப்பெற்றுள்ளால் சர்வதேச அரசியலில் ஒரு பதற்றமான நிலை தோன்றியுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே பிரச்சினைகள் முற்றியுள்ள சூழலிலேயே சீனாவுடனும் இந்தியாவுக்கு பகைமை அதிகரித்துள்ளது. சீனாவும், இந்தியாவும் இலங்கையின் அரசியல், பொருளாதாரத்தின் இரு துருவங்களாக உள்ளதால் இரு நாடுகளுக்கிடையிலான பாதிப்பு நேரடியாக இலங்கைக்கும் தாக்கம் செலுத்தும் என்பது நிதர்சனம்.

பொருளாதார ரீதியில் இந்தியா, இலங்கைக்கு பாரிய உதவிகள் மற்றும் முதலீடுகளை மேற்கொள்ள முடியாவிடினும் ஜே.ஆர். ஜெயவர்தன காலத்தில் ஆரம்பித்த அரசியல் பகிடியாட்டம் இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இந்தியாவைத் தாண்டி இலங்கையால் ஓர் அரசியல் தீர்வுக்கு நேரடியாக வரமுடியாத அளவு இரு நாடுகளுக்குமிடையிலான உறவுப்பாலம் தொடர்கிறது.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் காலத்திலும் சரி, தற்போதைய நல்லாட்சி அரசின் காலத்திலும் சரி அல்லது இவர்கள் இருவருக்கும் முன்பு ஆட்சிசெய்தவர்கள் காலத்திலும் சரி சீனா இலங்கையில் பொருளாதரத்தில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்ந்துள்ளது; திகழ்ந்துவருகிறது. பூகோள அரசியலில் தற்போதைய சூழலில் சீனாவையும், இந்தியாவையும் இலங்கை ஒருபோதும் பகைத்துக்கொள்ளமுடியாத நிலையே தோன்றியுள்ளது.

2009ஆம் ஆண்டு யுத்தத்தை வெற்றிகொண்ட அரசால் சர்வதேசத்தை வெற்றிகொண்டு இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ள முடியாதுபோனது. மேற்குலகின் ஜனநாயகம் விழுமியங்களைக் கடைப்பிடிக்கும் நாடுகளிலேயே அவை தமது முதலீடுகளையும் மேற்கொள்ளும். உலகின் பொருளாதார சொர்க்க பூமி என்றால் அது மேற்குலகம்தான். மேற்குலக சந்தையில் பிரவேசிக்கமுடியாத நாடுகள் பொருளாதார வல்லரசாவது என்பது வெறும் கனவு மாத்திரமே.

போருக்குப் பின்னரான நல்லிணக்கத்தை இலங்கை முன்னெடுக்கத் தயாரில்லை என்ற யதார்த்தத்தை மஹிந்த அரசு சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தியதன் காரணம்தான் சர்வதேசத்தில் அநாதரவாக போனது. மேற்குலகை விடுத்து பொருளாதார பலமுள்ள நாடுகள் என்றால் அவை ஜப்பானும், சீனாவும்தான். எனவே, மஹிந்த அரசு சீனாவுடன் நெருங்கி உறவைப் பேணி ஓரளவேனும் பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொள்ள முனைந்தது.

நேசக்கரம் நீட்டிய சீனா தனது வங்கிகளிலிருந்து பல்வேறு கடன் உதவிகளை குறைந்த வட்டியில் வழங்கி இலங்கையை மகிழ்வித்தது. இலங்கையின் நிலையை உணர்ந்து தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான சரியான தருணமாக க்கருதி, அம்பாந்தோட்டை உடன்படிக்கை, துறைமுக ஒப்பந்தம், அதிசொகுசு வாய்ந்த சங்ரில்லா ஹோட்டலை அமைத்தல் எனப் பல்வேறு மூலதனங்களை இலங்கையில் முதலிட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. என்றாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை உள்ளடக்கிய பொருளாதார வலயம் குறித்த ஒப்பந்தம் அன்று கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுவிட்டது.

சீனாவின் கொலனியாக இலங்கை மாறிவிடும் என்ற அபாயத்தை வெளிப்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பிரசாரத்தை மேற்கொண்டமை, நல்லிணக்கம் தொடர்பில் சர்வதேச ரீதியில் மஹிந்த அரசுக்கு எழுந்த அழுத்தங்கள் காரணமாக இரண்டு வருடங்கள் தனக்கு எஞ்சியிருந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்திருந்தார். '

கொடுத்த வாக்குறுதிகள்போன்று நல்லாட்சி அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடனேயே சீனாவின் சில அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தியிருந்தது. அதில் முக்கியமானதுதான் "போர்ட் சிட்டி' எனப்படும் துறைமுக நகரம். நல்லாட்சி அரசு ஆட்சிமாற்றத்தின் பின்னர் ஐ.நா. விவகாரம், வெளியுறவுக்கொள்கையில் மேற்கொண்ட நல்லிணக்க முயற்சிகளின் அடிப்படையில் மேற்குலகின் மூலதனத்தை எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகவில்லை என்பதால் மீண்டும் சீனாவுடனான உறவை மைத்திரி ரணில் அரசு புதுபித்துக்கொண்டு தற்போது அம்பாந்தோட்டை உடன்படிக்கையையும் 99 வருடகாலம் குத்தகைக்கு வழங்கியுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தல விமானநிலையத்தை அமைப்பதற்காக 185 பில்லின் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தற்போதைய அரசின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய பாரியதொரு கடன்தொகை காரணமாகவே 2014ஆம் ஆண்டுமுதல் இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துவருவதாக கடந்த காலங்களில் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். 2017ஆம் ஆண்டு 15 ஆயிரம் கோடியும், 2021ஆம் ஆண்டளவில் 21 ஆயிரம் கோடியும் என்ற அடிப்படையில் குறித்த இரண்டு திட்டங்களுக்காகவும் செலுத்தவேண்டிய கடன்தொகை தொடர்ந்து செல்கிறது.

தற்போதைய சூழலில் இலங்கைக்கு 9,500 கோடி கடன்தொகையாக செலுத்தவேண்டியுள்ளது. அரச வருவாயின் 85 வீதத்தை தொடர்ந்து கடனாக செலுத்திவருவதால் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்திசெய்ய முடியும் என்று வலியுறுத்தி சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை தற்போதைய அரசு வழங்கியுள்ளது.
சீனா விரித்த வலையில் இலங்கை எப்படியோ விழுந்துவிட்டது என்ற ஆனந்தத்தில் தற்போது சீனா உள்ளது. அரசியல் காரணங்களுக்காக சீனா ஒருபோதும் இந்தத் துறைமுகத்தை பயன்படுத்தாது என்று இலங்கைக்கான சீனத்தூதுவர் கடன்தொகையாக தெரிவித்துள்ளமை வேடிக்கையான விடயம் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இரண்டாம் உலக மகாயுத்தத்துக்குப் பின்னர் ஐரோப்பிய, ஆபிரிக்க சந்தைகளை ஆக்கிரமிக்க சீனா வகுத்துள்ள பட்டுப்பாதைத் திட்டத்துக்கு மையப்புள்ளியே அம்பாந்தோட்டை துறைமுகம். வியட்நாம், பங்களாதேஷ், தாய்வான் உள்ளிட இடங்களில் தனது மூலதனங்களை மேற்கொண்டு இராணுவத் தளங்களை அமைத்தும் சீனாவால் பட்டுப்பாதைத் திட்டத்தை எண்ணியது போல் விரிவாக்கமுடியாதுபோனது. பங்களாதேஷ், தாய்வான் உள்ளிட்ட நாடுகளில் இராணுவத்தளங்களை சீனா அமைத்த போது இந்தியா அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இந்திய பெருங்கடலில் நடைபெறும் உலகின் 70 வீதமான வர்த்தகத்தை தனது பட்டுப்பாதைத் திட்டத்தில் சீனா வேட்டையாட எண்ணுவதாகக் கூறியே இந்தியா கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இலங்கை மீது இந்தியா அதீத அக்கறைகொண்ட காரணம், ஒன்று இந்தியாவின் அண்மைநாடு, அடுத்ததாக பொருளாதார நலன். என்றாலும், இலங்கை பௌத்த நாடாக உள்ளதால் சீனாவுடன் உறவுகள் முறிந்தாலும் திரும்பி எளிதில் கட்டியெழுப்ப முடிகிறது.

அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்துக்கு முன்னர் இந்தியா கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. குறிப்பாக, கடந்த பெப்ரவரி மாதம் சீனாவின் போர்க்கப்பலொன்றை கொழும்பில் நங்கூரமிடுவதற்கே இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டு அந்த நடவடிக்கையை நிறுத்தியிருந்தது. இலங்கை எவரையும் பகைத்துக்கொள்ளமுடியாதன் காரணமாக இந்தியாவையும் பகைத்துக்கொள்ளாமல், சீனாவையும் பகைத்துக்கொள்ளாமல் தர்க்க ரீதியான பொருளாதார முடிவுகளை எடுத்து வருகிறது. திருகோணமலையிலுள்ள எண்ணெய்க்கிடங்குகள் அனைத்தையும் இந்தியாவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. விரைவில் அது குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன அண்மையில் கூறியிருந்தார்.

இதேவேளை, இலங்கை இந்திய சுதந்திர வர்த்த ஒப்பந்தமான எட்கா உடன்படிக்கை குறித்து கலந்துரையாடல்கள் 75 வீதம் முடிவடைந்துள்ள சூழலில் வருட இறுதிக்குள் எட்கா தொடர்பிலான பேச்சுகளை முடித்துக்கொள்ள எண்ணியுள்ளது அரசு. மத்தல விமானநிலையத்தையும் 40 வருட குத்தகைக்கு இந்திய அரசு கோரியிருந்த நிலையில், அரசமைப்பு விடயம், சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி விவகாரத்தில் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இராஜிநாமா உள்ளிட்ட விடயங்களால் மக்களின் எதிர்ப்புக்கும் அரசு உள்ளாகியுள்ளது.

2013ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 7.2 காணப்பட்டதாக அன்றைய மத்திய வங்கியின் வருடந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது. ஆனால், இன்று 6.5 வீதமாக அது குறைவடைந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வரலாற்றில் என்றுமில்லாதவாறு கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆறுமாத காலமாக வடபுலத்தில் வறட்சியும் தென்புலத்தில் இயற்கை அனர்த்தங்களும் ஏற்பட்டதால் விவசாய உற்பத்தி 50 வீதமான வீழ்ச்சியைக் கண்டிருந்தது. மூன்றாவது தடவையாக வரலாற்றில் விவசாய நாடாக கணிக்கப்பட்ட இலங்கை அரிசியை இறக்குமதிசெய்துள்ளது.

பொருளாதாரத்துக்கு விழுந்த பேரிடியிலிருந்து வெளிவருவதற்கு ஏற்றுமதியை அடிப்படையாகக்கொண்டு பொருளாதாரத்துக்கு இலங்கை மாறவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில்தான் தற்போது உள்ளது. சந்தர்ப்பங்கள் நழுவிடும் பட்சத்தில் எதிர்வரும் ஆண்டுகளில் இலங்கை பொருளாதார பேரொன்றுக்கு முகங்கொடுக்க வேண்டுடிவரும். ஜீ.எஸ்.பி. சலுகை, சர்வதேச வர்த்தகத் தடைகள் நீங்கியுள்ளதால் ஏற்றுமதியைக்கொண்ட பொருளாதாரத்துக்கு மாறக்கூடிய தெளிவான பாதையொன்று இலங்கையின் கண்முன்னே உள்ளது.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகை மூலம் ஐரோப்பிய சந்தையிலிருந்து வருடாந்தம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை வருவாயாகப் பெறமுடியும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூறியிருந்தது. மீன் ஏற்றுமதித் தடையும் நீக்கப்பட்டதால் வருடாந்தம் 1,500 மெட்றிக்தொன் மீனை ஐரோப்பிய சந்தைக்கு ஏற்றுமதிசெய்ய முடியும் என்று மீன்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார். நீண்டகாலமாக ஆடை உற்பத்தியிலும் இலங்கை வலுவான நாடாக உள்ளதால் ஆசியாவில் சிறந்த பொருளாதார அபிவிருத்தியை அடையக்கூடிய ஏதுவான காரணிகள் சுற்றியுள்ளன.

நல்லாட்சி அரசு சர்வதேச ரீதியில் நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளதால
சுற்றுலாத்துறையும் பாரிய மாற்றங்காணத் தொடங்கியுள்ளது. இலங்கையில் அரசியல் சூழலை சாதூரியமாக கையாண்டு இந்தியாவும் சரி, சீனாவும் சரி தமது பொருளாதார நிலைமைகளை வலுப்படுத்திக்கொள்ளவே செயற்படுகின்றன. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இலங்கையில் பொருளாராத பணிப்போர் நிகழ்வதுபோன்று மறுபுறத்தில் எல்லை விவகாரம் போருக்கான முரசொலிகளை எழுப்பியவண்ணம் உள்ளன.

எனவே, இந்து சமுத்திரத்தின் பொருளாதார கேந்திர நிலையமாக எதிர்காலத்தில் திகழும் என்று கணிக்கப்பட்டுள்ள இலங்கையின் பூகோள அரசியல், பொருளாதார நிலைமைகளும் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தாகக் காணப்படுகின்றன. இந்த இரண்டு நாடுகளுடனும் அரசியல், பொருளாதார, இராஜதந்திர, கலாசார உறவைப் பேணி இலங்கை எவ்வாறு முன்னோக்கிப் பயணிக்கப்போகின்றது என்பது
சர்வதேச ரீதியில் உற்றுநோக்கப்படும் ஒரு விடயமாகவுள்ளது.

Sunday, August 27, 2017

முதலாளித்துவ சித்தாந்தங்களால் தோல்விகண்ட அதிகாரப்பகிர்வு : சு.நிஷாந்தன்பல்லின மக்களும், பல் கலாசார, மொழி பண்பாடுகளைக்கொண்ட இலங்கையில் சமகால அரசியல் அரங்கில் நாலாபுறமும் ஓங்கியொழும் புதிய அரசமைப்புக்கான குரல், வரலாற்றின் காயங்களாலும், அனுபவங்களாலும், பேரிழப்புகளாலும் ஏற்பட்டதேயாகும்.

நீண்ட நெடிய காலமாக நல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் தமிழ் பேசும் சமூகத்துக்கு புதிய அரசமைப்பு என்பது காலத்தின் தேவையாகவுள்ளது. மெல்ல மெல்ல சிதைக்கப்பட்டுவரும் தமிழர்களின் வரலாற்றையும், பண்பாட்டையும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குக் கொண்டுசெல்ல அரசியல் அதிகாரம் என்பது நவீன ஜனநாயகத்தில் அத்தியாவசிய காரணியாகவுள்ளது.

வரலாற்றுக் காலந்தொட்டு இலங்கையில் தமிழ், சிங்கள மக்கள் வாழ்ந்துவந்தாலும் காலத்தின் கோலத்தால் அதிகாரங்கள் பெரும்பான்மையினம் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் சிங்களவர்களிடம் இன்று உள்ளது. அதிகாரங்களை வைத்துக்கொண்டு சுதந்திரத்துக்குப் பின்னரான இந்த 67 வருட காலத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை ஓரிரு வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது.
ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி சுதந்திரத்தைப் பெற்றுவிட்டு ஒற்றுமை என்ற ஒரு வார்த்தைக்கு அடிபணிந்து, டி.எஸ்.சேனநாயக்கவிடம் அடகுவைத்த தமிழரின் சுயநிர்ணய உரிமையை 67 ஆண்டுகள் உருண்டோடியும் மீட்கமுடியாமல் தமிழ் மக்கள் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் எப்போது இனவாதம் துளிர்விட்டதோ அன்றே தமிழர்களின் தன்னாட்சியை இனியொருபோதும் பெறமுடியாது என்பதே இன்றுவரை கற்றுக்கொண்ட பாடங்களாக உள்ளன. 1926ஆம் ஆண்டு தமிழர்கள் ஒற்றையாட்சி என்ற நிலைப்பாட்டில் இருந்தபோது சமஷ்டி அரசமைப்பின் மூலமே இலங்கையில் அனைவரும் சமாதானமாக வாழமுடியும் என்று வலியுறுத்திய எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க 1952ஆம் ஆண்டு ஐ.தே.கவிலிருந்து பிரிந்து தனது அரசியல் பலத்தை நிரூபிக்க கையில் எடுத்த ஆயுதமே இனவாதம்.
இலங்கைக்கு இனவாதம் என்பது அன்று புதிய சொல்லாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் மாறி மாறி ஆட்சிக்குவந்த இரண்டு பிரதான தேசியக் கட்சிகளும் போட்ட உரத்திலும், ஊற்றிய நீரிலும் இனவாதம் இன்று ஆலவிருட்சமாக மாறியுள்ளது. இனவாதம் வேரூன்றியதாலேயே அனைவரும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய அரசமைப்பொன்றை உருவாக்கமுடியாதுள்ளது.

இனவாதத்துடன் இந்த நாட்டில் வேரூன்றியுள்ள மற்றுமொறு காரணிதான் முதலாளித்துவப் போக்கையுடைய கட்சிகளின் அரசியல் பொருளாதார, சமூக இலக்குகள். முதலாளித்துவ நாடொன்றில் நாட்டு குடிகளின் அரசியல் அபிலாஷைகள் அரசமைப்பில் அங்கீகரிக்கப்படாவிடின் அந்நாடுகள் பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் என்பதே யதார்த்தம்.
ஒரு நாட்டில் சமூக, பொருளாதார அடிப்படையிலேயே அரசமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அதனடிப்படையிலேயே அரசமைப்புக்கான பாதுகாப்புகளும் உருவாக்கப்படுகின்றன. கம்யூனிஸ நாடுகளில் மக்களின் நலனை அடிப்படையாகக்கொண்டே அரசமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும். இதற்கு தக்க உதாரணங்கள்தான் கம்யூனிஸ சித்தாந்தங்கள் 20ஆம் நூண்றாண்டில் ஆரம்பம்முதல் விதைக்கப்பட்ட பல்வேறு நாடுகளில் இன்று அரசியல் ஸ்திரத்தன்மை நிலவுகின்றமை.

முதலாளித்துக் கொள்கையில் அரசமைப்பை உருவாக்கிய சில நாடுகளில் ஜனநாயகம் பூரணமாகக் காணப்பட்டாலும் முரண்பாடுகளும் சமூக ஏற்றத்தாழ்வுகளும் அதிகம். குறிப்பிட்ட சிலரின் தேவையைப் பூர்த்திசெய்ய ஆட்சியாளர்கள் விரும்புவதால் முதலாளித்துவக் கொள்கையைப் பின்பற்றும் பல்லின மக்களைக்கொண்ட நாடுகள் பாரதூரமான அரசியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றன.
1917ஆம் ஆண்டு ரஷ்யாவில் முதலாளித்துவத்துக்கு எதிராக இடம்பெற்ற புரட்சியின் பின்னர் மலர்ந்த லெனின் தலைமையிலான அரசு 1918ஆம் ஆண்டு உருவாக்கிய புதிய அரசமைப்பு அங்கு சமூகங்களுக்கிடையில் சமாதானத்தையும், பொருளாதார வளங்களையும் சம அளவில் பங்கிட்டுக்கொள்ளவும் உதவியது. தற்போதுவரை சில மறுசீரமைப்புகளுடன் ரஷ்யாவின் அரசமைப்பில் ஜனநாயகம் பேணப்படுகிறது.

அதேபோல், சீனாவில் 1949ஆம் ஆண்டு ஏற்பட்ட புரட்சியின் பின்னர் 1950ஆம் ஆண்டு புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்பட்டது. அதில் சமூக ஜனநாயகத்துக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவம் நிலவிய கியூபாவில் பிடல் கெஸ்ரோ தலைமையிலான அரசு மலர்ந்தவுடன் அங்கும் சமவுடமை அரசமைப்பொன்று கொண்டுவரபட்டது. கம்யூனிஸ நாடுகளில் மக்கள் நலனுக்கே முன்னுரிமையளிக்கப்பட்டமை, அரசமைப்புகள் உருவாக்கப்பட்டமை வரலாறு.
இலங்கையில் முதலாளித்துவப் போக்கின் அடிப்படையிலும், இனவாதச் சிந்தனையின் அடிப்படையிலும் அரசமைப்புகள் உருவாக்கப்பட்டமையே மூன்று தசாப்தகால யுத்தத்துக்கும் வழிவகுத்தது.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவால் 1956ஆம் ஆண்டு சிங்களம் அரசகரும மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டது. 1987ஆம் ஆண்டு 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரும்வரை அதற்கான அங்கீகாரத்தை இலங்கையை ஆண்ட அரச தலைவர்கள் கொடுத்தமை பெரும் வரலாற்றுத் துரோகமாகும்.
1972ஆம் ஆண்டு, 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசமைப்புகள் மக்களின் கருத்துகளைப் பெறாது உருவாக்கப்பட்டவையாகும். வரலாற்றுக் காலந்தொட்டு இலங்கையின் பூர்வீகக் குடிகளாக வாழும் தமிழர்களுடன் கலந்துரையாடல், இந்த நாட்டில் எவ்வாறு அரசமைப்பொன்றை உருவாக்கமுடியும் என்ற சிந்தனை சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் எழாமை இன்றுவரை உள்ள ஒரு துரதிர்ஷ்டமான விடயம்.

1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு சிறிமாவோ பண்டாரநாயக்கவால் கொண்டுவரப்பட்டது. இனப்பிரச்சினைத் தீர்வுக்காகக் கொண்டுவரப்பட்ட அந்த யாப்பால் தீர்வுக்குப் பதிலாக பிரச்சினைகளே மேலும் அதிகரித்தன. அதுவரைகாலமும் 1947ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் கொண்டுவரப்பட்டிருந்த சோல்பரி யாப்பில் சிறுபான்மை மக்களுக்காக இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் தகர்த்தெறியப்பட்டன.
1978ஆம் ஆண்டு தமிழர் தரப்புடன் கலந்துரையாடி, சர்வக் கட்சி மாநாட்டை நடத்தியே புதிய அரசமைப்பொன்று கொண்டுவரப்படும் என்று கூறிய ஜே.ஆர்.ஜெயவர்தன அரசு, தமிழர் தரப்பை புறக்கணித்து முதலாளித்துவப் போக்கைக்கொண்ட அரசமைப்பை கொண்டுவந்தது. முதலாளித்துவக் கொள்கைகள் என்பது பெரும்பான்மை சமூகத்துக்கு எப்போதும் பாலில் தேனைக் கலந்துகொடுப்பது போன்றே ஆட்சியாளர்களால் அர்த்தப்படுத்தப்படுகிறது.

அன்று பௌத்த மக்களின் கதாநாயகனாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள ஜே.ஆர். செய்தவை கொஞ்சநஞ்சமல்ல. முதலாவது, அவரின் இராஜதந்திரம் அரசமைப்பின் இரண்டாவது ஷரத்தை இலங்கையை ஒற்றையாட்சி நாடாக பிரகடனப்படுத்தியமை. இரண்டாவது, பௌத்த மதத்தை அரச மதமாகவும், அதனைப் பேணுவதே ஆட்சியாளர்களின் தலையாய கடமை என்றும் 9ஆவது ஷரத்தில் குறிப்பிட்டமை.
இந்த இரண்டு விடயங்களையும் மாற்றமுடியாது என்று 83ஆவது ஷரத்தில் குறிப்பிட்ட அவர் இவ்வாறு ஒற்றையாட்சியையோ, பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையோ மாற்றுவதாயின் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதுடன், மாற்றத்தின் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் என்று இலங்கையில் மீண்டுமொரு புதிய அரசமைப்பொன்றைக் கொண்டுவரமுடியாத அளவு சாணக்கியத்தைக் கையாண்டு தமிழர்களுக்கு இந்த நாட்டில் பெறக்கூடிய அனைத்து அரசமைப்பு ரீதியான அதிகாரங்களையும் இல்லாதொழித்திருந்தார்.

1978ஆம் ஆண்டு அரசமைப்பின் படி கொண்டுவரப்பட்ட விகிதாசாரத் தேர்தல்முறையால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது சிம்ம சொப்பனமாக்கப்பட்டுள்ளது. ஜே.ஆருக்குப் பின்னர் இதுவரை ஐ.தே.கவாலோ அல்லது சு.கவாலோ நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறமுடியாதுபோனமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு கட்சிகளின் கூட்டணியின் அடிப்படையிலேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றிருந்தார். அதேபோல் தற்போதைய தேசிய அரசும் பிரதான இரண்டு கட்சிகளுடன் பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவுடனேயே மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நாடாளுமன்றில் வைத்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றத்துக்கு மைத்திரி ரணில் தலைமையிலான அரசு முன்வைத்த மூன்று முக்கிய காரணிகள்தான் புதிய அரசமைப்பு, தேர்தல்முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல். அதனடிப்படையில்தான் தற்போது அரசமைப்புக்கான நகர்வுகளும் இடம்பெற்று வருகின்றன. அரசமைப்புத் தொடர்பான கலந்துரையாடல்கள் 1972ஐ போலவோ, 1978ஐ போலவோ அல்லாது இன்று மக்கள்மயப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்றில் அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசமைப்புக்கான கருத்துகளையும், உள்ளடக்கத்தையும் முன்மொழிய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. அரசமைப்பின் முழு வடிவம் என்பது பூரண ஜனநாயகமாகும். லத்தின் அமெரிக்க நாடுகளில் 1970, 1980களில் அரங்கேறிய இராணுவப் புரட்சிகள் ஒடுக்கப்பட்ட மலர்ந்த அரசுகளால் அங்கு உருவாக்கப்பட்ட அரசியல் மறுசீரமைப்புகளால் ஜனநாயகத்தை மக்கள் பூரணமாக அனுபவிக்கமுடிகிறது.

அதபோல் காலத்துக்குக்காலம் பல்வேறு நாடுகள் தமது சமூக, பொருளாதார அரசியலின் அடிப்படையில் புதிய அரசமைப்புகளை, அரசமைப்பு மறுசீரமைப்புகளை ஏற்படுத்தியுள்ளன. 1957, 1965, 1972 1978, 2000ஆம் ஆண்டுகள் மற்றும் யுத்தத்துக்குப் பின்னர் என பல சந்தர்ப்பங்களில் இலங்கையில் அனைத்தின மக்களும் சமாதானத்துடன், வாழக்கூடிய அரசமைப்பொன்றை கொண்டுவர இலங்கைக்கு வாய்ப்புகள் கிடைத்தும் இனவாதம், பௌத்த தேசியவாதம் மற்றும் முதலாளித்துவக் கொள்கையால் அவை இழக்கப்பட்டிருந்தன. தற்போது எதிரும், புதிருமாக இருந்து இரு தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து அமையப்பெற்றுள்ள தேசிய அரசால் அந்தச் சவாலை வெற்றிக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

இந்திய இலங்கை அரசின் புரிந்துணர்வுடன் ஏற்படுத்திக்கொண்ட 13ஆவது திருத்தத்தைப் போன்று அமையாமல் அனைவரும் இலங்கையர்கள் என்ற நாமத்துடன் வாழக்கூடிய அரசமைப்பொன்றை அரசு கொண்டுவரவேண்டியது காலத்தின் தேவையாகவுள்ளது. அதனைவிடுத்து பொன்விழா காணவுள்ள இலங்கையின் இனவாதத்துக்கு கிரீடம் அணிவிப்பதுபோன்று அரசமைப்பைக் கொண்டுவர நடவடிக்கையெடுக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்பது சர்வதேசத்தின் கைகளுக்கும் செல்லும் என்பதே இன்றைய சர்வதேச அரசியல் சூழலும் யதார்த்தமுமாகும்.

போராட்டங்களால் நல்லாட்சிக்கு கடிவாளம் போடுகிறாரா மஹிந்த? சு.நிஷாந்தன்


சைட்டம் விவகாரத்தில் ஆரம்பித்து குப்பை பிரச்சினைவரை இன்று நல்லாட்சி அரசுக்கு எதை தொட்டாலும் பிரச்சினையாகவே உள்ளது. 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்தது முதல் பல்வேறு அரசுகள் இலங்கையை ஆட்சிசெய்துள்ளன. ஆனால், தற்போதைய நல்லாட்சி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் போன்று எந்தவொரு அரசுக்கு எதிராகவும் இலங்கையில் ஏற்படவில்லை என்பது கோடிட்டுக்காட்டப்படவேண்டிய விடயமாகும்.

1956ஆம் ஆண்டு எஸ்.டப்ளியூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவால் தனிச்சிங்கள சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுமுதல் இலங்கையில் மொழிப் பிரச்சினை, பெரும்பான்மைவாத,
சிறுபான்மைவாத, அடிப்படைவாத மற்றும் உரிமை சார்ந்த பிரச்சினைகளாகவே காலங்கள் கடந்துவந்தன.
1978ஆம் ஆண்டு சிறுபான்மைச் சமூகங்கங்களின் ஆதரவின்றி கொண்டுவரப்பட்ட இரண்டாம் குடியரசு அரசமைப்புக்கு எதிராகக்கூட இடம்பெறாத போராட்டங்களும், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இன்றைய நல்லாட்சி அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்றன.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுதல், நல்லிணக்கம் சமாதானம் போன்ற விடயங்களே இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் பெரும்பாலும் பேசுபொருளாக இருந்தது. ஆனால், ஆட்சிமாற்றத்தின் பின்னர் அரசு ஜெனிவா விவகாரத்தை சர்வதேச உறவுகள் மற்றும் இராஜதந்திர அணுகுமுறைகள் மூலம் குறிப்பிட்டளவு வெற்றிகொண்டமையால் ஜெனிவா விவகாரம் என்பது இலங்கை அரசுக்கு ஒரு சாதாரண விவகாரம் போன்றே உள்ளது.

அதற்கு மாறாக உள்நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று அரசு முகங்கொடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ள சூழலில் உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் அரசுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளமையே நிதர்சனம்.
சைட்டம் விவகாரமே இந்த அரசுக்கு எதிராக எழுந்த முதலாவது பாரிய பிரச்சினை. மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி எனப்படும் சைட்டம் கல்லூரிக்கு முன்னாள் அரசே அங்கீகாரம் வழங்கியிருந்தது. சைட்டம் கல்லூரி உருவாக்கப்படும்போது கல்லூரியில் வைத்தியக் கல்வியை பயிலும் மாணவர்கள் இறுதியாக ரஷ்யாவில் சென்று கல்வி கற்றே வைத்திய பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது.

என்றாலும் 2014ஆம் ஆண்டு அக்கல்லூரியில் நான்காவது கட்டமாக பயிலும் மாணவர்கள் தொடக்கம் அடுத்துவரும் அனைவரும் இலங்கையிலேயே பட்டத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சைட்டம் கல்லூரியின் தரம் உயர்த்தப்பட்டதால் அரசு அதற்கு அங்கீகாரம் அளித்திருந்தது.
இந்த விவகாரம் தொடர்பில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நீண்டகாலமாக மௌனத்தையே காத்துவந்தது. தனியார் மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்த அன்று மஹிந்த அரசு வெளிப்படையாக மேற்கொண்ட நடவடிக்கைக்கு வைத்தியர் சங்கம் எவ்வித எதிர்ப்பையும் தெரிவித்திருக்கவில்லை. கடந்த வருடமே இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான சிலரே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமைத்துவத்தில் இருப்பதாக பரவலாகப் பேசப்படுகிறது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற மஹிந்த ராஜபக்ஷ அரசியலிலிருந்து விடைபெறும் முகமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிவிட்டு சென்றார். ஆனால், இன்று மஹிந்தவுடன் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவாகச் செயற்பட்ட குழுவின் அதாவது, கூட்டு எதிரணி என்று கூறிக்கொள்பவர்கள் மீண்டும் தமது சுயநல அரசியலுக்காக மஹிந்தவை பொறியாக்கினர்.

அதன் பின்னர் அரசுக்கு எதிராக பல்வேறு காய்நகர்த்தல்களை மஹிந்த ராஜபக்ஷ தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார். குறிப்பாக, வடமத்திய மாகாண சபையையே அண்மையில் ஆட்டங்காண வைத்திருந்தார். இவரின் காய்நகர்த்தல்களின் ஒரு விஸ்வரூபமாகவே இன்று அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுதவிர, மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் அவர்களால் பொறுப்பற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், செயற்பாடுகள் மற்றும் வினைதிறனற்ற பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் தற்போதைய அரசே முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சைட்டம் விவகாரத்தை அரசு நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்கும் என்று ஜனாதிபதி அண்மையில் அறிக்கையொன்றின் மூலம் அறிவித்திருந்தார். ஆனால், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதற்கு இணங்காது தொடர்ச்சியாக நாங்கள் போராட்டத்தை மேற்கொள்ளுவோம் என்று கூறிவருகின்றது. இந்நிலையில், தபால் ஊழியர்கள், ரயில் ஊழியர்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட தரப்பும் அரசுக்கு எதிராக அற்பசொற்ப காரணங்களுக்காக போராட்டத்தை முன்னெடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

இந்தப் போராட்டங்கள் இவ்வாறு தொடர, அண்மையில் ஏற்பட்ட மீதொட்டமுல்ல குப்பைமேடு அனர்த்தம் காரணமாக தலைநகர் கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்றி கொண்டுவருவதற்கு இடமின்றி அரசு அல்லோலகல்லோலப்பட்டு வருகின்றது. கொழும்பில் வகைப்படுத்தப்பட்ட விதத்தில் குப்பைகள் சேகரிக்கப்படாமையால் கொழும்புக்கு அண்டிய இடங்களில் எங்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு அரசுக்கு இடமில்லை என்பதுடன், தனியாரும் காணிகளை வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சேகரிக்கப்படும் குப்பைகளை புத்தளத்தில் கொட்டுவது தொடர்பில் அண்மையில் அமைச்சரவையில் மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மெகா பொலிஸ் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து வெளியிட்டிருந்தார். ஆனால், அதற்கு நான் ஒருபோதும் அனுமதியளிக்க மாட்டேன் என்று மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் நிராகரித்திருந்தார். குப்பைகள் அகற்றப்பாடாத நிலையில் மேல்மாகாணத்தில் டெங்கு நோய் தலைவிரித்தாடுகிறது.
இதுவரை 170இற்கும் அதிகமானோர் டெங்குநோயால் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. டெங்குநோய் தாக்கம் அதிகரித்துள்ள சூழலிலேயே சைட்டத்திற்கு எதிராக வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டுவருகின்றனர். தற்போது இந்தப் பிரச்சினைகளுடன், கடந்த அரசால்
அனுமதியளிக்கப்பட்டிருந்த உமாஓயா திட்டத்திற்கு எதிராக ஊவாவில் புரட்சி வெடித்துள்ளது. மக்கள் அனைவரும் உமாஓயா திட்டத்திற்கு எதிராக பாதையில் இறங்கியுள்ளனர்.
உமாஓயா திட்டத்தால் நான்காயிரத்துக்கு அதிகமான வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், விவசாய நிலங்களிலும் கிணறுகளிலும் நீர் வற்றியுள்ளது. இதனால் மக்கள் குடிதண்ணீர்கூட இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவை தவிர வடக்கு மற்றும் வடமேல், வடமத்திய மாகாணங்களில் தொடர்ந்து வறட்சி நிலவிவருகிறது. இதுவரை குறித்த மாகாணங்களில் வறட்சியால் ஐந்து இலட்சத்திற்கு அதிகமான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். நாட்டில் நெல் உற்பத்தியில் குறித்த மூன்று மாகாணங்களே முன்னிலையில் உள்ளன. ஆனால், இம்முறை இங்கு சிறுபோக, பெரும்போக உற்பத்தியை மேற்கொள்ள காலநிலை கைக்கொடுக்காததால் அரசுக்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை  ஏற்பட்டுள்ளது. முன்னதாக 10ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசியை பாகிஸ்தானிடமிருந்து அரசு இறக்குமதி செய்திருந்தது. தற்போது இம்மாதமளவில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதால் 10 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசியை அரசு இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உள்நாட்டில் இவ்வாறு அரசுக்கு எதிராக அழுத்தங்களும், போராட்டங்களும் அதிகரித்துள்ள சூழலில் சர்வதேச மட்டத்திலும் அரசு பல்வேறு விவகாரங்களுக்கு முகங்கொடுத்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்லவேண்டிய இக்காட்டான நிலையிலேயே உள்ளது.

உள்நாட்டில் உற்பத்தியின்மை, கடந்த அரசின்  காலத்தில் கையாளப்பட்ட வினைத்திறனற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச எதிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் பொருளாதாரம் பெரிதும் பின்னடைவை சந்தித்திருந்தது. ஐரோப்பிய சந்தைகளை எமது உற்பத்திகளை ஏற்றுமதிசெய்ய வழங்கப்படும் ஏற்றுமதித் தீர்வையான ஜி.எஸ்.பி. சலுகை இல்லாமல் போனமையால் அந்நிய வருமானம் பாரிய வீழ்ச்சியை சந்தித்திருந்தது.

ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இலங்கைக்குக் கிடைக்காமல் போனமையால் நேரடியாக நான்கு இலட்சம் பேருக்கும் மறைமுகமாக 10 இலட்சம் பேருக்கும் வேலைவாய்ப்புகள் இல்லாமல் போனது. அத்துடன், எண்ணற்ற ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளும் இழுத்து மூடப்பட்டன. குறிப்பாக, இலங்கையின் ஆடை உற்பத்திக்கு ஐரோப்பிய சந்தைகளில் அன்று நல்ல வாய்ப்பு காணப்பட்டது. இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இல்லாமல் செய்யப்பட்டதால் இன்று அதன் பயனை பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அனுபவித்துவருகின்றன.

பொருளாதாரத்தை முற்றாக மறுசீரமைக்கவேண்டிய தேவை அரசுக்கு இருக்கின்ற நிலையில், அதற்கான நிதியை சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் சர்வதேச வங்கிகளில் மற்றும் சர்வதேச மானியங்கள் என்ற அடிப்படையில்தான் பெற்றுக்கொள்ள வேண்டும். சர்வதேச ரீதியில் கடன்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமாயின் உள்நாட்டில் அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவான காரணிகள் காணப்பட வேண்டும்.

குறிப்பாக, இலங்கை என்பது பல்லின மக்களைக்கொண்ட பன்மை கலாசாரத்தைக் கொண்ட நாடாகும். இங்கு இனங்களுக்கிடையில் ஒற்றுமை நிலவவேண்டும். ஆனால், நல்லிணக்கம், சமாதானம், சகவாழ்வு என்பது இலங்கை சுதந்திரமடைந்தது முதல் எட்டாக்கனியாகவே உள்ளது. நாட்டில் இனவாதம், பெரும்பான்மை தேசியவாதம், சிங்களமொழிக்கு முன்னுரிமை, தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகள் புறக்கணிப்பு உள்ளிட்ட காரணங்களால் மூன்று தசாப்தகால யுத்தமொன்றுக்கும் இலங்கை முகங்கொடுக்க நேரிட்டது.
யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் இலங்கையில் இன்னமும் நல்லிணக்
கம் ஏற்படவில்லை. அத்துடன், பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களுக்கு நீதியும்
கிடைக்கவில்லை. கடந்த அரசு நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காததால் சர்வதேச ரீதியில் பாரிய சவால்களுக்கும், பொருளாதார தடைகளுக்கும் முகங்கொடுக்கவேண்டிய நிலை காணப்பட்டது.

இந்நிலையை உடைத்தெறிந்து இன்று நல்லாட்சி அரசு சர்வதேச நம்பிக்கையை வென்றெடுத்து சர்வதேசத்துடன் ஒன்றிணைந்து பயணிக்கின்றது. சர்வதேச நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளது. நீண்டகால போராட்டமாக உள்ள அதிகாரப்பகிர்வுக்குத் தீர்வை முன்வைக்கும் முகமாக புதிய அரசமைப்புக்கான பணிகளை அரசு மும்முரமாக முன்னெடுத்து வருகிறது. அரசமைப்புத் தொடர்பிலான இடைக்கால அறிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் சமர்ப்பிக்க திட்டமிட்டிருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
பெரும் இக்கட்டான நிலையில் அரசு உள்நாட்டு சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவரும் சூழலில் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான கூட்டு எதிரணியின் செயற்பாடுகளால் இலங்கை மீண்டும் இனவாதத்தை நோக்கி மெல்ல மெல்ல நகர்கிறது. அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுபல சேனா போன்ற சிங்கள கடும்போக்கு அமைப்புகளும் நாட்டில் கலவரங்களைத் தூண்ட காய்களை நகர்த்தி வருகின்றன.

2014ஆம் ஆண்டு அளுத்கமயில் ஏற்பட்ட கலவரம் போன்று மீண்டும் நாட்டில் ஒரு கலவரம் ஏற்பட்டால் இனவாத அமைப்புகள் தலைதூக்கும். அதனை வைத்து எதிர்வரும் தேர்தல்களில் வாக்குவேட்டை நடத்தலாம் என்பது மஹிந்த அணியின் காய்நகர்த்தலாக உள்ளது. ஒட்டுமொத்தமாக தற்போதைய நல்லாட்சி அரசுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலை என்பது இலங்கை வரலாற்றில் எந்தவொரு
அரசுக்கும் ஏற்படாத நிலையே ஆகும்.

இவை அனைத்தையும் சமாளித்து அரசு தற்போது இரண்டரை வருடங்களைக் கடந்துள்ளது. இன்னும் இரண்டு வருடங்களை கடந்தே ஜனாதிபதித் தேர்தல் ஒன்றோ அல்லது நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றோ நடத்தவேண்டியுள்ளது. ஆனால், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் மற்றும் ஆயுட்காலம் முடிவடையும். மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவேண்டிய இக்கட்டான நிலையில் அரசு உள்ளது.
எனவே, தற்போதைய அரசு அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அரசுக்கு ஆதரவளிக்கவேண்டிய நிலையிலேயே சிறுபான்மை மக்கள் உள்ளனர். ஆனால், பெரும்பான்மை மக்கள் இரண்டாக பிளவுபட்டுள்ளனர். இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை அரசு எவ்வாறு ஏற்படுத்த வழிகோலப்போகின்றது என்பதை பொறுத்திருந்ததுதான் பார்க்கவேண்டும்.